ஈரோடு அருகே பரிதாபம்: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

Update: 2022-12-13 20:41 GMT

ஈரோடு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பாய்லர் வெடித்தது

ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் பால்கோவா, பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் 4 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஈரோட்டை அடுத்த கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 70) என்ற தொழிலாளி தண்ணீரை சூடாக்கும் பாய்லரை இயக்கிக்கொண்டு இருந்தார். அப்போது அதிக அழுத்தம் காரணமாக எதிர்பாராதவிதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

முதியவர் பலி

இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ராமன் பரிதாபமாக இறந்தார். மேலும் பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலையின் மேற்கூரையும் சேதமடைந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வருவாய்த்துறையினரும், ஈரோடு தாலுகா மற்றும் மொடக்குறிச்சி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ராமனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்