திருச்செந்தூர் செல்லும் வழியில் நெல்லையில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

திருச்செந்தூர் செல்லும் வழியில் நெல்லையில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர். சர்ப்ப காவடி எடுத்தும் பக்தர்கள் சென்றனர்.

Update: 2023-01-12 20:39 GMT

திருச்செந்தூர் செல்லும் வழியில் நெல்லையில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர். சர்ப்ப காவடி எடுத்தும் பக்தர்கள் சென்றனர்.

பாத யாத்திரை பக்தர்கள்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இதுதவிர தை பொங்கல், தைப்பூசம், மாசி திருவிழா போன்ற நாட்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று கடலில் குளித்து, முருகனை தரிசிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். அவர்கள் சொந்த ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

நெல்லையில் குவிந்தனர்

இவ்வாறு நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கூட்டம், கூட்டமாக திருச்செந்தூர் நோக்கி நடந்து செல்கிறார்கள்.

இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல், மானூர், வன்னிகோனேந்தல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் வழியில் நெல்லையில் நேற்று குவிந்தனர்.

அந்த பக்தர்கள் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். மேலும் ஆற்றங்கரையில் உணவு தயாரித்து சாப்பிட்டு விட்டு, சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் தங்களது பாத யாத்திரையை தொடர்ந்தனர். அவர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன் திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து விட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறினார்கள்.

வேல் அலகு

பாத யாத்திரையாக செல்வோரில் சிலர் வாயில் வேல் அலகு குத்தி நடந்து செல்கிறார்கள். 1 அடி நீளம் முதல் 10 அடி நீளம் வரை வேல் குத்தி செல்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக சக பக்தர்கள் செல்கிறார்கள். இதுதவிர காவடியும் சுமந்து சென்றனர்.

சர்ப்ப காவடி

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா வன்னிகோனேந்தலை சேர்ந்த மருதபாண்டியன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் சர்ப்ப காவடிக்கு உரிய ஏற்பாடு செய்தனர். இதையொட்டி 4 அடி நீளம் உடைய நல்ல பாம்பை ஒரு கண்ணாடி பேழைக்குள் வைத்து நேற்று காலை பக்தர்கள் புறப்பட்டனர். 4 ஆட்டோக்களில் சர்ப்ப (நல்ல பாம்பு) காவடியுடன் பக்தர்கள் சென்றனர். வரும் வழியில் நெல்லையில் நின்று முருகன் பக்தி பாடல்கள் பாடினர்.

காவடி ஏன்?

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ''நாங்கள் கடந்த ஆண்டு சர்ப்ப காவடி எடுத்து சென்று திருச்செந்தூரில் விட்டோம். தற்போது 2-வது ஆண்டாக சர்ப்ப காவடி எடுத்து செல்கிறோம். பக்தர்கள், பொது மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டி இந்த காவடி எடுத்து செல்கிறோம்'' என்றனர்.

பின்னர் அவர்கள் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர். அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் திருச்செந்தூர் கடலில் சர்ப்பத்தை விட்டு வழிபடுவதாக கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்