திருஉத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜரை காண தினமும் குவியும் பக்தர்கள்

ஆண்டு முழுவதும் சன்னதி மூடப்பட்டிருந்தாலும் திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜரை காண தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Update: 2023-06-06 18:45 GMT

திருஉத்தரகோசமங்கை, 

ஆண்டு முழுவதும் சன்னதி மூடப்பட்டிருந்தாலும் திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜரை காண தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மரகத நடராஜர்

ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரு உத்தரகோசமங்கையில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மங்களநாதர் என்ற பெயரில் சாமி சன்னதியும், மங்களநாயகி என்ற பெயரில் அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. முக்கியமான சன்னதிகளில் ஒன்றாக மரகத நடராஜர் சன்னதியும் உள்ளது. மற்ற கோவில்களை விட இங்குள்ள நடராஜர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

அதற்கு முக்கிய காரணம் இங்கு உள்ள மரகத நடராஜர் சிலை ஒரே கல்லால் ஆன மரகத கல்லால் செதுக்கப்பட்டதாகும். மரகத கல்லால் செய்யப்பட்ட சிலையாக உள்ள நடராஜர் மீது சூரிய ஒளி பட்டால் இந்த மரகத கல்லின் தன்மை பொலிவிழந்து விடும் என்ற காரணத்தால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே இந்த மரகத நடராஜர் சன்னதி திறக்கப்படும்.

பக்தர்கள் குவிந்தனர்

குறிப்பாக மார்கழி மாதம் திருவாதிரை நாள் அன்று மட்டுமே இந்த மரகத நடராஜர் சன்னதி பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும். அன்று ஒரு நாள் பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மீண்டும் திருவாதிரை நாள் அன்று இந்த சன்னதி மரகத நடராஜர் மீது சந்தனம் சாத்தப்பட்டு நடை சாத்தப்படும். இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக மரகத நடராஜர் சன்னதியில் வைத்து தினமும் பகல் 12.30 மணிக்கு நடைபெறும் உச்சி கால பூஜையை காண பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் வருகின்றனர். மரகத நடராஜர் சன்னதி மூடப்பட்டு கிடப்பதால் அந்த சன்னதி முன்பு அதற்கு மாற்றாக சிறிய அளவிலான மரகத நடராஜர் மற்றும் ஸ்படிகலிங்கம் வைக்கப்பட்டு அதற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

சிறப்பு தீபாராதனை

இந்த உச்சி கால பூஜையை பார்ப்பதற்காகவே தினமும் பக்தர்கள் கூட்டம் இந்த சன்னதியில் அதிகமாகவே இருந்து வருகின்றது. உச்சிகால பூஜை நடைபெற்று மூடப்பட்டுள்ள மரகத நடராஜருக்கும், சன்னதி முன்பு நின்று சிறப்பு மகா தீபாராதனை பூஜைகளும் நடைபெறுகிறது. மேலும் மூடப்பட்டுள்ள சன்னதி முன்பு நின்று கதவுகளின் இடைவெளியில் தெரியும் மரகத நடராஜரை தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்