ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்
மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 1,132 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 1,132 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு சங்க மாநில தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் தேவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாதந்தோறும் முதல் தேதியில் பென்ஷன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 86 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவையை உடனடியாக வழங்கிட வேண்டும், போராடி பெற்ற உரிமைகளுக்கு கோர்ட்டின் மூலம் பெற்ற தடையை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலைமறியல் நடைபெற்றது.
1,132 பேர் கைது
அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பிச்சை ராஜன், மாவட்ட செயலாளர் பால்முருகன் உள்ளிட்ட பலர் பேசினா். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 1,132 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.