மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சிற்றம்பலம், பிப்.22-
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன்பு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டததுக்கு பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளர் புனல்வாசல் வின்சென்ட் ஜெயராஜ் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர்கள் விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க தஞ்சை மாவட்ட துணை தலைவர் மேனகா, மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து பேசினார். முடிவில், தகுதியான மாற்றுத்திறனாளிகளை பணித்தள பொறுப்பாளர்களாக நியமனம் செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக வேலை வழங்கும் பதிவேட்டை பராமரிக்க வேண்டும், அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும், ஊராட்சிகள் தோறும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து கிராம சபை கூட்டங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பேராவூரணி ஒன்றிய மேலாளர் மகேஷிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.