ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ராமநாதபுரத்தில் வருகிற 6-ந் தேதி காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ம் ஆண்டுக்கான போலீஸ் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு வருகிற 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
6-ந்தேதி....
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 987 பேருக்கு இந்த உடல்தகுதி தேர்வு நடக்கிறது. 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை உயரம், மார்பளவு சரிபார்த்தல், 1500 மீட்டர் ஓட்டம் போன்றவை நடைபெறும். இதில் தகுதி பெற்றவர்களுக்கு 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், ஓட்டம் போன்ற உடல்திறன் தேர்வுகள் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள உடல்தகுதி தேர்வில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தேர்வுக்கான பணிகளில் ஈடுபட உள்ளனர்.
உடல்தகுதி தேர்வு நடைபெற உள்ளதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.