சமூக வலைதளங்களில் வீடியோ பரவல் எதிரொலி: மதுபானம் விற்கப்பட்ட பெட்டிக்கடைக்கு 'சீல்'
சமூக வலைதளங்களில் வீடியோ பரவல் எதிரொலியாக மதுபானம் விற்கப்பட்ட பெட்டிக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தட்டாங்கோவில் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் மது விற்பனை நடப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து அங்கு மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் உத்தரவின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு 'சீல்' வைத்தனர். இதேபோல் கொட்டகையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட காசாங்குளத்தை சேர்ந்த தனபால் (வயது55) என்பவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.