பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-25 17:10 GMT

சென்னை,

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் கவர்னரின் துணை செயலாளர் புகார் மனு அளித்துள்ளார். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டி கவர்னர் மாளிகைக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கவர்னர் மாளிகை சார்பில் கவர்னரின் துணை செயலாளர் டி.செங்கோட்டையன் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

25-ந்தேதி பிற்பகல் 2.45 மணியளவில் கவர்னர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது. பெட்ரோல் குண்டுகளுடன் வந்த சில மர்மநபர்கள் ராஜ்பவன் பிரதான நுழைவுவாயில் எண்.1 வழியாக நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்ததால், அவர்களால் ராஜ்பவனுக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் உஷாராக இருந்ததால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் ராஜ்பவனின் பிரதான நுழைவுவாயில் எண்.1-ல் முதல் குண்டு வீசப்பட்டது. பெரிய சத்தத்துடன் வெடித்தது. அதனையடுத்து அந்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ராஜ்பவன் பிரதான நுழைவுவாயில் பகுதி சேதம் அடைந்தது.

கடந்த பல மாதங்களாக கவர்னரின் மீது அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியும், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து வாய்மொழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொது கூட்டங்களிலும், அவர்களுடைய சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்கள் கவர்னரின் அரசியலமைப்பு சட்ட பணிகளை செய்யவிடாமல் அவரை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருக்கின்றன. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும், பலன் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி கவர்னர் தர்மபுரம் ஆதீனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த போது, தடியடி மற்றும் கற்களால் உடல்ரீதியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கவர்னரின் உயிருக்கு பொது மிரட்டல் விடுக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் உண்மையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை. மாறாக தீவிரமான இந்த சம்பவங்களை சிறிய குற்றங்களாக மாற்றியது. கவர்னருக்கு எதிராக வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் என தொடர்ந்து தற்போது வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்திருப்பதன் மூலம் மாநிலத்தின் உயர்ந்த அரசியல் அமைப்பு அதிகாரத்தில் இருக்கும் கவர்னரின் பாதுகாப்பு சீர்குலைந்து போய் இருப்பதை காட்டுகிறது.

கவர்னரை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வெட்கக்கேடான வெடிகுண்டு தாக்குதல்களை தீவிரமாக ஆராய்ந்து, இந்திய தண்டனை சட்டம் 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் கீழ் கவர்னரால் பணியாற்ற முடியாது. எனவே இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, முறையான விசாரணை மேற்கொண்டு, தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் கவர்னருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்