கிருஷ்ணகிரியில் பரபரப்பு: உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு-7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரியில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-09 18:45 GMT

உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகி

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வாஞ்சி என்கிற சதீஷ் (வயது 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ உள்ளிட்டோர் இருந்தனர். சதீஷ் வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வெளியே இருந்து சத்தம் போட்டனர்.

சி.சி.டி.வி. கேமராவில் பதிவு

திடீரென்று அவர்கள் தாங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மீது வீசினார்கள். இதில் பெட்ரோல் குண்டு வீட்டின் வாசலில் விழுந்து வெடித்து சிதறி கரும்புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறினார்கள். அதே நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

சம்பவம் குறித்து சதீஷின் குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்கள் சிதறி கிடந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

முன்விரோதம்

அதில் 7 பேர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை எடுத்து வருவதும், அதில் தீயை பற்ற வைத்து வீட்டின் மீது வீசுவதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சதீசிற்கும், சிலருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்