அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அரியலூர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 278 மனுக்கள் பெறப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் முத்துசேர்வமடம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், முத்துசேர்வமடம் கிராமத்தில் நாங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கழிவறை வசதி, சாலை, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் இதனை முழுமையாக ஆய்வு செய்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
11 ஆண்டுகளாக போராடும் மாற்றுத்திறனாளி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, தழுதாலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 39). மாற்றுத்திறனாளி. இவரது தாய் கங்கைகொண்டசோழபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்தார். தாயின் வாரிசு என்ற முறையில் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட தாலுகா அலுவலகம், முதல்-அமைச்சர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தும் தனக்கு இதுநாள்வரை அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்கிடவில்லை. இதனால் தனது குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும், மன உளைச்சல் காரணமாக குடும்பத்தார் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளதாகவும், தான் இந்த வேலைக்கு 11 ஆண்டுகளாக போராடி வருகிறேன் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
பரிசு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களை தேர்வு செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.