4 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

4 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-10-09 18:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் முத்துக்குமார், கருப்பையா, பாலமுருகன், முருகவேல் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பக்ரைன் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். இந்நிலையில் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் நீண்டநாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரை தொடர்புகொண்டு தங்களை மீட்குமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்ததகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 4 பேரையும் மீட்க கோரி கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத நிலையில் 115 நாட்களாகியும் 4 பேரையும் மீட்காததால் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி நேற்று குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் தலைமையில் 4 மீனவர்களின் குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளுடன் கலெக்டர் விஷ்ணுசந்திரனை சந்தித்தனர். மீனவர்கள் 4 பேரும் 115 நாட்களாக பக்ரைன் நாட்டில் சிறையில் உள்ளனர். இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே மத்திய அரசை வலியுறுத்தி பக்ரைன் நாட்டு சிறையில் வாடும் மேற்கண்ட 4 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்