பள்ளிக்கு கழிவறைகள் கட்டித்தரக்கோரி மனு

பள்ளிக்கு கழிவறைகள் கட்டித்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-04 20:49 GMT

பெரம்பலூர்:

மழைநீர் தேங்காமல் இருக்க...

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, வேப்பூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மேடாக்க வேண்டும். போதிய கழிவறைகள் கட்டி கொடுக்க வேண்டும். பழுதான கட்டிடங்களை பழுது நீக்கித்தர வேண்டும். இது தொடர்பாக கடந்த கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கல்குவாரி

குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்கு உட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள பீல்வாடி கல்குவாரியை தடை செய்ய வேண்டும்.

மேலும் இது தொடர்பாக சித்தளி ஊராட்சி மன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அந்த கல்குவாரியை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

வீடு கட்ட அனுமதி

பெரம்பலூர் தாலுகா செங்குணம் அருந்ததியர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்களது கிராமத்தின் மலையடிவாரத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 235 மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தலா ரூ.34,272 மதிப்பீட்டில் 2 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரானிக் ப்ரெய்லி ரீடரினையும், தலா ரூ.5,560 மதிப்பீட்டில் 12 காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்