வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மனு

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.

Update: 2023-08-14 19:59 GMT

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

பாளையங்கோட்டை அன்னை இந்திராநகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தலித் கண்ணன், மகளிர் அணி நிர்வாகி மாடத்தி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில், ''வடக்கு வீரவநல்லூர் அருந்ததியர் மக்களுக்கு 1971 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு புதிய நத்தம் சர்வே எண், கணினியில் இணைத்து கணினி பட்டா வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

மாணவர்-தங்கை மீது தாக்குதல்

பறையர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் தலைவர் திருச்செல்வன் தலைமையில், பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து மனு வழங்கினர். அதில், ''நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திரா செல்வி ஆகியோரை வீடுபுகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அழகேசன் உள்ளிட்டவர்கள் தலைமையில் மனு வழங்கினர். அதில், ''நெல்லை டவுன் நயினார்குளம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும், இல்லையெனில் மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்