ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியிடம் இந்து முன்னணி, பா.ஜனதாவினர் மனு

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியிடம் இந்து முன்னணி, பா.ஜனதாவினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-09-15 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம், நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் கசமுத்து, ஆறுமுகநேரி நகர பா.ஜ.க. தலைவர் முருகேச பாண்டியன் ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான இடம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. அதில் முன்பக்கம் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டப்போவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் ஆறுமுகநேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு கடலில் விஜர்சனம் செய்வதற்கான பேரணியில் இந்த செந்தில் விநாயகர் ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். அதுபோல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வட மாவட்ட முருக பக்தர்கள் ஆறுமுகநேரி வந்தவுடன் மெயின் பஜாரில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் தங்கி அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திவிட்டு மீண்டும் கோஷத்தோடு திருச்செந்தூர் செல்வது வழக்கம். எனவே இப்படிப்பட்ட வழிபாட்டு முறைகள் இருக்கும் நிலையில் இங்கு இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தலங்கள் அமைத்தால் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே கட்டிடம் கட்ட நகர பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது திருச்செந்தூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராமசாமி, ஆறுமுகநேரி நகர செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்