நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-21 18:45 GMT

கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி அதன் மூலமே மருத்துவ கல்வியை பெற வழிவகுத்து வருகிறது. இந்த நடைமுறையால் தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி ஆளும் கட்சியான தி.மு.க. நீட் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடியில் உள்ள கனி திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மருத்துவர் அணி அமைப்பாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி இணைந்து நடத்துகின்ற இந்த கையெழுத்து இயக்க அறப்போர் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும். தேவையில்லாத ஒன்றை நம் மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த நீட் தேர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்