ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு

குளத்தூர் அருகே திருப்பூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.;

Update:2023-01-02 23:18 IST

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா திருப்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்.

அதில், ``குளத்தூர் அருகே திருப்பூர் கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வரை பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. அதன் பின்பு புதிய சட்ட விதிகளின் பல கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது எங்கள் கிராமத்தில் கருப்பர் கோவில் திருவிழாவிற்கு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்துள்ளோம். வருகிற மார்ச் மாதம் 11-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தனர்.

காவிரி-வைகை-குண்டாறு திட்டம்

இதேபோல ஆலங்குடி அருகே வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், தங்கள் கிராமத்தில் வம்பன் காலனியில் பொது மயானத்திற்கு செல்லக்கூடிய சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளித்தனர். விராலிமலை குன்னத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ``காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த 2008-2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கரூர் மாவட்டம் மாயனூரில் கதவணை கட்டப்பட்டு புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் வரை வழித்தடம் அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடம் புஞ்சை நிலம், அரசு புறம்போக்கு நிலம், மானாவாரி நிலம் வழியாக சென்றது. ஆனால் அதன்பின் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் இத்திட்டத்தில் வழித்தடம் மாற்றியமைத்து அதிக புஞ்சை நிலங்கள், வீடுகள், விவசாய கிணறுகள், விளைநிலங்கள், மரங்கள், குளங்கள் பாதிக்கப்படும் வகையில் உள்ளது. இந்த வழித்தடத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். நிலத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

340 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்