நகராட்சி வரி ரசீதில் தெருபெயர் குழப்பத்தால் மக்கள் அவதி

நகராட்சி வரி ரசீதில் தெருபெயர் குழப்பத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-01 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- ராமநாதபுரம் நகர் வெளிப்பட்டிகம் பகுதியில் கொல்லன் பட்டரைக்கார தெருவின் இறுதியில் அமைந்துள்ளது கான் சாஹிப் தெரு. நகராட்சி எல்லைக்குள் விரிவாக்க பகுதியான இங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமானோர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் கான் சாஹிப் தெரு என்ற முகவரியை அரசின் பல்வேறு துறைகளுக்கும், நகராட்சிக்கும் சமர்ப்பித்து ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு, அஞ்சலக கணக்கு, பாஸ்போர்ட், சொத்து பரிமாற்ற பதிவு, வாக்காளர் பட்டியல் என அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நகராட்சி ஆவணங்களில் இந்த தெருவின் பெயர் முறையான பதிவு இன்றி, நகராட்சி வரி ரசீதுகளில் சிலருக்கு கான் சாஹிப் தெரு என்றும் வேறு சிலருக்கு நாகநாதபுரம் புதுக்குடியிருப்பு தெரு என்றும் இரண்டு விதமான தெரு பெயர்கள் பதிவேற்றம் செய்து வருவதால் குழப்பம் நிலவுகிறது.

வாக்காளர் பட்டியலில் கான் சாஹிப் தெரு என்று நகராட்சி கோப்புகளில் இருந்தும்கூட இந்த தெருவின் பெயர் குழப்பம் தொடர்ந்து இருந்து வருவதால் பொதுமக்கள் அவதியடையும் நிலை உள்ளது. எனவே, முதல்-அமைச்சர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, நகராட்சி ஆவணங்களில் உள்ளபடி ஏற்கனவே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வரும் கான் சாஹிப் தெரு என்ற பெயரை நிரந்தரமாக்கவும் பொதுமக்களின் குழப்பத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்