பெருந்துறை சிப்காட் சாயக்கழிவு நீரால் விளைநிலங்கள் பாதிப்பு:மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பெருந்துறை சிப்காட் சாயக்கழிவு நீரால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.
பெருந்துறை சிப்காட் சாயக்கழிவு நீரால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சாயக்கழிவு நீர்
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக தெரிகிறது. இதனால் சிப்காட்டை சுற்றியுள்ள குளம், குட்டைகளில் சாயக்கழிவு நீர் தேங்கி விளை நிலங்கள் மாசுபட்டு விட்டன. இதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் சாயக்கழிவு நீரால் விளைநிலங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வை உடனே எடுக்கவேண்டும். தினசரி வெளியேறும் சாயக்கழிவுநீரை அளவீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று சிப்காட் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளிடம், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், விரைவில் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகள் அளவீடு செய்யப்படும். தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.