பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளா்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை, தனது கடின உழைப்பால் மாபெரும் இயக்கமாக மாற்றி 1½ கோடி தொண்டர்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த ஒரே இயக்கம் அ.தி,மு,க. தான்.
பொதுக்குழு எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை. அவைத்தலைவர் இல்லாதநிலையில், தற்காலிக அவைத்தலைவராக ஒருவரை நான் முன்மொழிய வேண்டும். அதற்கு, எடப்பாடி பழனிசாமி வழிமொழிய வேண்டும். ஆனால் பொதுக்குழுவில் நான் பேச ஆரம்பித்த போதே கூச்சல், குழப்பம், ரவுடிகள் அட்டூழியம் என அவமரியாதை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவானது. அப்போது, சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களையும் ரத்து செய்வதாக கூறியது வரம்பு மீறிய செயல். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். குண்டர்கள் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள் என்றார்.
இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம் அன்பழகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கோபால், நிர்வாகிகள் இமாகுலின், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.