பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையை புதிதாக அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

லாரியில் இருந்து விழும் ஜல்லிக்கற்கள், பிளை ஆஷ் பவுடரை அகற்றுவதுடன், பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-09-29 18:30 GMT

தேசிய நெடுஞ்சாலை

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226 விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக தனியார் சிமெண்டு ஆலைகளை சேர்ந்த லாரிகள் மூலப்பொருட்கள் மற்றும் சிமெண்டு மூட்டைகளையும், பல்கர் லாரியில் சிமெண்டு ஏற்றி செல்லவும், டிப்பர் லாரிகளில் கருங்கல், ஜல்லி, மணல் ஏற்றி செல்லப்படுகிறது.

இது மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூரை சேர்ந்த ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லவும், விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது

இந்த தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், பெரம்பலூர் டவுன் பகுதியில் உள்ள 4 ரோடு சந்திப்பு சாலையில் அரியலூர் முன்பாக உள்ள அல்லிநகரம் வரையில் மேடு பள்ளமாக இருபுறமும் காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இச்சாலையில் செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச்செல்வதால் இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் ரோடு ஏறி இறங்குகிறது. சாலை சமமாக இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். தார் சாலையில் மேடு பள்ளங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

சாலை அமைக்க கோரிக்கை

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த ஆண்டு பராமரிப்பு பணி செய்தனர். ஆனால், இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும். இதுதவிர லாரியில் இருந்து விழும் ஜல்லிக்கற்கள், பிளை ஆஷ் பவுடர் ஆகியவை சாலையின் இருபுறமும் கொட்டிக்கிடக்கிறது. இதை அகற்றக்கோரி கடந்த 2 மாதங்களாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல் பெரம்பலூர்- அரியலூர் நெடுஞ்சாலை ரோட்டில் 4 சந்திப்பு ரோடு, கவுல்பாளையம், சித்தளி உள்ளிட பல்வேறு இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே லாரியில் இருந்து விழும் ஜல்லிக்கற்கள், பிளை ஆஷ் பவுடரை அகற்றுவதுடன், பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்