பெரம்பலூர்: செங்கல் லோடு இறக்க சென்ற போது மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி

பெரம்பலூர் அருகே செங்கல் லோடு இறக்க சென்ற இடத்தில் லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-17 14:16 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். மாணிக்கவாசகத்திடம் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 34) டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஆனந்தராஜ் சேலம் மாவட்டத்தில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு பெரம்பலூரில் உள்ள சுப்பிரமணியன் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். லாரி தெரு வழியாக வர முடியாததால் மாற்று வழி காண்பிக்க சுப்பிரமணியும் லாரியில் ஏறியுள்ளார்.

லாரியை ஆனந்தராஜ் ஓட்டி சென்றார். லாரியின் பின்னால் சுமைதூக்கும் தொழிலாளிகளான ஈச்சம்பட்டியைச் சேர்ந்த புஷ்பராஜ் (60), குப்புசாமி (55) வீட்டு உரிமையாளர் சுப்பிரமணி ஆகியோர் உள்பட 4 பேர் சென்றனர். லாரி சுப்பிரமணி வீட்டுக்கு அருகில் சென்ற போது குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதால் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. இதையறிந்த சுமைதூக்கும் தொழிலாளி புஷ்பராஜ் பதட்டத்தில் லாரியின் கதவை தொட்டு இறங்க முயற்சிக்கும்போது மின்சாரம் பாய்ந்தது.

இதை பார்த்த சுப்பிரமணி அவரை எட்டி உதைத்து கீழே தள்ளி தானும் கீழே குதித்து உள்ளார். அதே நேரத்தில் வலது புறம் லாரியின் டிரைவர் ஆனந்தராஜ் இரும்பு கதவைத் தொட்டு குதிக்க முற்படும்போது மின்சாரம் பலமாக தாக்கி சுயநினைவு இழந்து சுருண்டு கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்க முற்படும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படவே குப்புசாமி பத்திரமாக லாரியை விட்டு கீழே இறங்கினார். சுமை தூக்கும் தொழிலாளி புஷ்பராஜ் லேசான காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தராஜன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்