நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால் தலைமை தாங்கினார். தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ரம்யா வரவேற்றார். முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவிதொகை என வருவாய் துறை சார்பில் 28 பேருக்கும், 3 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட 41 பேருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வழங்கினார். முகாமில் தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.