பொள்ளாச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு

பொள்ளாச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-09-19 19:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

தூய்மை பணியாளர்கள்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதற்கிடையில் அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு கேட்டு மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சப்-கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.650 வழங்க உத்தரவிட்டு இருந்தது. மேலும் சென்னை ஐகோர்ட்டும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி தர உத்தரவிட்டு இருந்தது. இதேபோன்று மாவட்ட கலெக்டர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606 வழங்க உத்தரவிட்டு இருந்தார். ஆனால் தற்போது வரை உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கவில்லை. எனவே கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து, ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குண்டும், குழியுமான சாலை

பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். எனவே நகரில் சாலை அமைத்து தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆன்லைன் மோசடி

வக்கீல் இமயவரம்பன் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை ஆகிய பகுதிகளில் இணையதளத்தின் மூலமாக கடனுதவி செய்து தருவதாக ஏமாற்றி பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது. முகநூல், வாட்ஸ்-அப் எண்களுக்கு சட்டவிரோதமாக லிங்க் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். அந்த லிங்கை அழுத்தியவுடன் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. பின்னர் மாதத்திற்கு இரு மடங்காக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். பணத்தை செலுத்தாதபட்சத்தில் அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு அவரின் புகைப்படத்தை மார்பிங்க் செய்து ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே இணையதளத்தின் மூலமாக கடனுதவி செய்து தருவதாக ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆனைமலை அண்ணா நகரில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் இல்லாததால் அங்கு உள்ள ஒரு வீட்டில் நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதால் குழந்தைகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே அங்கன்வாடி மையம் கட்டி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்