திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்டன.;
திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதி சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கினர். இதில் 580 மனுக்கள் பெறப்பட்டன.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடந்த கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் சேத்துப்பட்டு தாலுகா மடம் கிராமத்தை சேர்ந்த 5 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை நலத்திட்ட உதவியாக கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
ஆரணி
இதேேபால ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, பட்டா திருத்தம், வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 74 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்யாறு
செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 104 மனுக்கள் பெறப்பட்டன. இதில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.