தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.

Update: 2023-01-21 18:45 GMT

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.

தை அமாவாசை

அமாவாசை தினங்களுள் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு புண்ணிய நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதுடன் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் நீராடி வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து சுப நிகழ்வுகள் நடைபெறும் என்றும் கருதப்படுகிறது. எனவே ஆண்டுதோறும் இந்த அமாவாசை தினங்களில் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

அந்த வகையில் தை அமாவாசை தினமான நேற்று தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். தூத்துக்குடியில் திரேஸ்புரம் கடற்கரை, புதிய துறைமுகம் கடற்கரை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள படித்துறைகளில் காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கடலில் புனித நீராடி எள், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு சுற்றித்திரிந்த காகங்களுக்கு உணவு அளித்தனர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

கோவில்பட்டி- கழுகுமலை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளம் அருகில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான வர்கள் கலந்துகொண்டு, தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் கொடுத்தார்கள்.

கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அந்தப் பகுதியில் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தெப்பக்குளத்திற்கு மேல்புறம் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி புரோகிதர்களால் நடத்தப்பட்டது. தர்ப்பணம் கொடுத்தவர்கள் காகங்களுக்கு உணவு கொடுத்தனர். இதற்காக பெரிய பீப்பாய்களில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

கழுகுமலை சித்தி விநாயகர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

கயத்தாறு- விளாத்திகுளம்

கயத்தாறில் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார மக்கள் மட்டுமன்றி மதுரை, தேனி கும்பகோணம், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் கடற்கரையில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

பின்னர் அருகே வைப்பார் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்