பொதுமக்கள் வாயில் துணி கட்டி நூதன முறையில் கலெக்டரிடம் மனு
நெல்லையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் வாயில் துணி கட்டி நூதன முறையில் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
நெல்லையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் வாயில் துணி கட்டி நூதன முறையில் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். கலெக்டர் கார்த்திகேயன் மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு கவுன்சிலர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், அப்பகுதி மக்கள் தங்களது வாயில் வெள்ளை துணியை கட்டியவாறு வந்து கலெக்டரிடம் மனு வழங்கினர்.
அதில், ''ராமையன்பட்டி அரசு புது காலனி, சிவாஜி நகர், சைமன் நகர், சகி நகர், பாலாஜி நகர், வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதியில் 165 தெருக்கள் உள்ளன. இந்த பகுதிக்கு பஞ்சாயத்து நிதியில் இருந்து எந்த வேலையும் நடைபெறவில்லை. தெருவிளக்கு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. இதுபற்றி பேசுவதற்கு உரிமை மறுக்கப்படுவதுடன், காவல்துறை மூலம் பொய் வழக்கு போடுவதால் வாயில் துணி கட்டி மனு கொடுக்கிறோம். எனவே நெல்லை மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள எங்கள் பகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
கல்லூரி மாணவி
நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி காளீஸ்வரி, தன்னுடைய தாயார் பிரமுவுடன் வந்து மனு வழங்கினார். அதில், ''நாங்கள் பூர்வக்குடி இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நான் தற்போது கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் 5-ம் வகுப்பு படித்த போதிருந்த சாதி சான்றிழ் கேட்டு வருவாய் துறையில் விண்ணப்பித்து வருகிறேன். பல முறை மனு வழங்கியும் இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் அரசின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவது சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக சாதி சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.
வீட்டுமனை பட்டா
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அந்த கட்சியினர் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர். அதில், ''அம்பை தாலுகா அலுவலகத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் பணியில் உள்ளனர். இதனால் மற்ற சமுதாய மக்களின் மனுக்கள் மீது சரியாக பணிகள் நடப்பதில்லை. எனவே இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் காலனியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறவர்களுக்கு வரைமுறைப்பட்டா வழங்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.
பல் டாக்டர்
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டர் வினோதினி தனது பெற்றோருடன் வழங்கிய மனுவில், ''பாளையங்கோட்டை மகாராஜா நகரை சேர்ந்த டாக்டர் பிரவீன் என்பவருக்கும், எனக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதுடன், எனது குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து வைத்து உள்ளனர். என்னுடைய குழந்தையை அவர்களிட மிருந்து மீட்டு தர வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.