20 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் பரிதவிப்பு

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் கடந்த 20 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர் குடிநீர் சப்ளை குழாய்களில் மலக்கழிவுகள் கலந்துள்ள அவலமும் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-19 17:12 GMT


திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் கடந்த 20 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர் குடிநீர் சப்ளை குழாய்களில் மலக்கழிவுகள் கலந்துள்ள அவலமும் ஏற்பட்டுள்ளது.

5 ஆயிரம் குடும்பங்கள்

திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் கிருஷ்ணா நகர், காருண்யா தெரு, ஜெயலட்சுமி நகர்், ஐயப்பன் நகர் உள்ளன இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதிக்கான குடிநீர் அய்யப்பன் நகரை ஒட்டிள்ள ஏரியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. ஒரு வாரம் பத்து நாட்கள் என விட்டு விட்டு தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த சிரமங்களை அடிக்கடி அனுபவித்து வருகின்றனர்.

கால்வாய் அமைக்கும் பணி

கடந்தாண்டு பெய்த கனமழையின் காரணமாக இந்த பகுதியில் பெரும்வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் சாலையை விரிவுபடுத்தி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கால்வாய் பணிகள் பொதுமக்களுக்கு மாற்றுப்பாதைகளை ஏற்படுத்திவிட்டு செயல்படுத்தாமல் ஆங்கங்கே முறையற்று நடைபெறுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். முன்னறிவிப்பு இன்றி தெருக்கள் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் நடப்பதற்கு கூட வழி இன்றி வயல்வெளிகள் வழியாக நீண்டதூரம் நடந்து சென்று வருகின்றனர்.

20 நாட்களாக குடிநீர் இன்றி தவிப்பு

கால்வாய் அமைக்கப்படும் இந்த பகுதியில் தான் இந்த பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும் பிரதான குடிநீர் சப்ளை குழாயும் செல்கிறது இதனை ஆங்காங்கே துண்டித்து விடுகின்றனர். அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர் இணைப்பு இடத்தில் உள்ள முருகர் கோவில் வாயில் முன்பு குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டு மிகப்பெரிய கால்வாய் பள்ளம் எடுத்துவிட்டு இன்னும் பணிகள் முடிவு பெறாமல் மாத கணக்கில் உள்ளது.

மேலும் தெருக்களுக்கு செல்லும் குடிநீர் சப்ளை குழாய்களும் துண்டிக்கப்பட்டு அவைகள் அனைத்தும் திறந்து கிடக்கிறது. இதனால அப்பகுதி மக்கள் கடந்த 20 நாட்களாக குடிநீர் சப்ளை இன்றி பரிதவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.

மலக்கழிவுகள் கலப்பு

தற்போது திருவண்ணாமலையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சுடுகாட்டு பகுதியில் உள்ள குப்பை கால்வாய் மலக்கழிவுகள் அனைத்தும் இந்த புதிய கால்வாயில் அடித்து வரப்பட்டு தற்போது குடிநீர் சப்ளை குழாய்க்குள் சென்று நிரம்பியுள்ளது

வரும் நாட்களில் இந்த குடிநீரை பயன்படுத்தும் போது இப்பகுதி மக்களுக்கு பெரும் சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது இந்த பகுதி பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்