தேவதானப்பட்டி அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

தேவதானப்பட்டி அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2022-05-25 21:38 IST

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் அடிப்படை வசதிகள் சரிவர செய்துதரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி 11-வது வார்டு பொதுமக்கள் நேற்று ஜி.கல்லுப்பட்டி வீரமங்கலம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு கெங்குவார்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், 11-வது வார்டில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி அகற்றினர். அதன்பிறகு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. சுமார் 8 மாதங்களாக சாலை அமைக்கப்படாததால் குண்டும், குழியுமான மண்ரோட்டை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயும் அகற்றப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலை மற்றும் சாக்கடை கால்வாய்களை விரைவில் அமைக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கெங்குவார்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்