குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
கொத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அடுத்த கொத்தமங்கலம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் தனித்தனியாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கூலாட்சிகொல்லை குடியிருப்பு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானதால் அந்த பகுதிக்கு குடிதண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் சில நாட்களாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில நாட்களாக வந்த தண்ணீர் கலங்களாக வந்துள்ளது.
சாலை மறியல்
கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த கூலாட்சிகொல்லை பகுதி பெண்கள் வாடிமாநகர் கடைவீதிக்கு காலிக்குடங்களுடன் வந்து குடங்களை சாலையில் வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு துணையாக அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது ஒரு மாதமாக நல்ல தண்ணீர் வரவில்லை, சில நாட்களாக வந்த தண்ணீரும் கலங்கலாக உள்ளது என்று பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அதிகாரிகளிடம் காட்டினர். இதையடுத்து விரைவில் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதுநீக்கம் செய்து வழக்கம் போல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வாடிமாநகர் கடைவீதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 பேர் மீது வழக்கு
கொத்தமங்கலம் கடைவீதியில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்த சம்பவத்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் கொடுத்த புகாரின் பேரில் கொத்தமங்கலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் பார்த்திபன், பிரபாகரன், தீர்த்தவேல், ராஜன் ஆகிய 4 பேர் மீதும் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.