சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

குன்னூர், நெல்லியாளத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2022-12-07 18:45 GMT

ஊட்டி, 

குன்னூர், நெல்லியாளத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அம்பிகாபுரம் பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்கு காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் வழக்கத்தை விட அதிகமாக கேட்டது.

இருப்பினும், இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாடிப்படி வழியாக வீட்டின் முன்புறம் நுழைந்த சிறுத்தை நாயை வேட்டையாட விரட்டி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் சிறுத்தை சுற்றுச்சுவர் மீது ஏறி தாண்டி சென்றது.

தொழிலாளர்கள் ஓட்டம்

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண்.2-ல் தோட்ட தொழிலாளர்கள் அங்கு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சிறுத்தை அடிக்கடி புகுந்து, வளர்ப்பு நாய், கோழிகள், கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் டேன்டீ தோட்டத்தின் நடுவே உள்ள சாலையில் சிறுத்தை நடமாடியது. இதனால் தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். சிறுத்தை அடிக்கடி புகுந்து வருவதால், தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், கால்நடைகளை மேய்ப்பவர்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்