ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டம்

சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலத்தை கைவிடக் கோரி ஸ்ரீ மதுரை ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-27 15:06 GMT

கூடலூர், 

சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலத்தை கைவிடக் கோரி ஸ்ரீ மதுரை ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் மண்டலம்

நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பக எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்படுகிறது என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

சூழல் உணர் திறன் மண்டலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, புத்தூர்வயல், அள்ளூர் வயல் உள்பட பல கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் ஊர்வலம்

இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத கால அவகாசம் அடுத்த மாதம் 4-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் சூழல் உணர் திறன் மண்டலத்தை கைவிட வேண்டும். மேலும் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீ மதுரை ஊராட்சி மக்கள் 2 ஆயிரம் பேர் நேற்று கூடலூருக்கு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் புதிய பஸ் நிலையம், ஐந்து முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி திடலை அடைந்தனர். பின்னர் அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

போராட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுனில், துணைத்தலைவர் ரெஜி மேத்யூ உள்பட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு பேசினர். போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதுகுறித்து ஸ்ரீ மதுரை ஊராட்சி மக்கள் கூறும்போது, இந்த பிரச்சனையில் மாநில அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்