அடிப்படை வசதிக்கு ஏங்கும் கத்தலூர் ஊராட்சி மக்கள்
கத்தலூர் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கத்தலூர் ஊராட்சி
விராலிமலை ஒன்றியம், கத்தலூர் ஊராட்சியில் 24 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள செவந்தியாணிப்பட்டி, வேடம்பட்டி, மேலவேடம்பட்டி, குரும்பன்குளம், குறும்பர்தெரு, கத்தலூர், கவுண்டம்பட்டி, தோப்புடையார் பண்ணை, வடக்கு ஆத்துப்பட்டி, ஏகிரிபட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்காததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விராலிமலை தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி பிரிவு சாலையில் இருந்து செவந்தியாணிப்பட்டி வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலையோரம் பதிக்கப்பட்டு இருந்த காவிரி குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்தன. அதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டது.
குடிநீர் குழாய்கள் சேதம்
சேதமடைந்த காவிரி குடிநீர் குழாய்களுக்கு பதில் வேறு குழாய் அமைத்து மீண்டும் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அங்குள்ள ஆழ்குழாயில் இருந்து வரும் உப்பு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
இதையடுத்து, மேற்கண்ட கிரமங்களை சேர்ந்த பெண்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து கிராமங்களுக்கு சென்று காவிரி குடிநீரை வாகனங்களில் பிடித்து வந்தும், பலர் குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர்.
மயான பாதை
கத்தலூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தெருவிளக்குகள் சரிவர எரியாததாலும், இரவு நேரங்களில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதாலும் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையானது மண்சாலை மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலைகளாக உள்ளன. கத்தலூர், வேடம்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சரியான மயான பாதை வசதி அமைத்து கொடுக்காததால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதேபோல் கத்தலூரில் ஆதிதிராவிடர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் அனைத்தும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மழை நேரங்களில் தண்ணீர் வீட்டிற்குள் ஒழுகும் நிலையில் உள்ளது. இதை சீரமைத்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வீடுகள் சேதம்
கத்தலூரை சேர்ந்த வசந்தா:- எங்கள் ஊருக்கு கடந்த ஒரு வருடமாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் நாங்கள் எங்களது ஊரில் இருந்து கிடைக்கும் உப்பு கலந்த போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதனால் எங்கள் ஊரைச் சேர்ந்த பலருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் தொந்தரவுகள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் எங்கள் ஊரில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. எங்கள் ஊரில் உள்ள ஆதிதிராவிடர் காலனி வீடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன. இதை சீரமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி குடிநீர்
செவந்தியாணிப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி:- எங்கள் ஊர் மக்கள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்காததால் அருகே உள்ள திருச்சி மாவட்ட பகுதியை சேர்ந்த கிராமங்களுக்கு சென்று காவிரி குடிநீரை தலையில் தூக்கிக்கொண்டு வந்து பயன்படுத்துகிறோம். கடந்த ஒரு ஆண்டாக குடிநீருக்காக நாங்கள் அலைந்து வருகிறோம். எனவே எங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பு தண்ணீர்...
கவுண்டம்பட்டியை சேர்ந்த ராமசாமி:- கவுண்டம்பட்டிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வரை காவிரி குடிநீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் புதுப்பட்டியில் இருந்து செவந்தியாணிப்பட்டி வரை சாலை புதிதாக போடப்பட்ட போது பாம்பாளம்மன் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி குடிநீர் குழாயை சாலை அமைத்தவர்கள் சேதப்படுத்தி விட்டார்கள். சேதப்படுத்திய குடிநீர் குழாயை புதிதாக போட்டு தருமாறு சாலை அமைத்தவர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. குழாய்கள் சேதமடைந்ததால் நாங்கள் உப்பு தண்ணீரை குடித்து வருகிறோம். எனவே எங்கள் கிராமத்திற்கு காவிரி குடிநீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.