ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

கரூர் கடைவீதியில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-10-22 17:29 GMT

ஆயுத பூஜை

ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்வார்கள்.இதனால் கரூர் ஜவகர் பஜார், காமராஜர் மார்க்கெட், கரூர் லைட் ஹவுஸ் மற்றும் கடைவீதி பகுதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை நேற்று படுேஜாராக நடந்தது. இதனால் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

விலை நிலவரம்

ஒரு லிட்டர் பொரி ரூ.10-க்கும், வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.50 முதல் ரூ.60 வரையும், பன்னீர் திராட்சை கிலோ ரூ.100-க்கும், ஆப்பிள் ரூ.200-க்கும், மாதுளை ரூ.200-க்கும், கதம்பம் ரூ.20-க்கும், வாழை கன்று ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.100-க்கும், மாவிலை ரூ.6 முதல் ரூ.10 வரைக்கும், வாழை இலை ஒன்று ரூ.6க்கும் விற்பனையானது.இதேபோல் ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும், திருஷ்டி பூசணி ரூ 30-க்கும், எலுமிச்சம்பழம் ஒன்று ரூ.6 முதல் ரூ.7-க்கும் விற்பனையானது. ேமலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூஜை பொருட்களை பல இடங்களை ேதடிப்பிடித்து வாங்கி சென்றதை காண முடிந்தது.

பூக்களின் விலை உயர்வு

கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பூக்களை போட்டி, போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். இதனால் பூ விலையும் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி நேற்று விற்ற பூக்களின் நிலவரம் கிலோவில் பின்வருமாறு:- குண்டுமல்லி ரூ.1200, முல்லைப்பூ ரூ.700, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.600, கோழிக்கொண்டை ரூ.100, 4 ரோஜா பூ கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும் விற்பனையானது.

கூட்டம் குறைவு

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி அலாவுதீன் கூறுகையில், இந்தாண்டு ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக மக்கள் பூஜை பொருட்கள் வாங்கி செல்வது சற்று குறைவாகவே உள்ளது. இதற்கு விலைவாசி உயர்வு, பொருளாதார தட்டுப்பாடு உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் பூஜை பொருட்களை ஆவலுடன் தேடி வந்து வாங்கி செல்கின்றனர். இந்த ஆயுத பூஜையை அடுத்து வரும் காலகட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் நல்லது நடைபெற வேண்டும், என்றார்.

விலை அதிகம்

கரூர் புதுத்தெருவை சேர்ந்த முருகேசன் கூறுகையில், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பழங்கள், பூக்களின் விலை அதிகமாகவே உள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் தங்களின் முன்னோர்கள் வீடுகளில் ஆயுத பூஜையை கொண்டாடியதை போல தங்களுடைய சந்ததிகளும் ஆயுத பூஜையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என்ன விலை இருந்தாலும் பரவாயில்லை என்பதால் பொரிக்கடலை, வாழை இலை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்