திருமருகலில், பஸ் நிலையம் கட்டப்படுமா?

திருமருகலில், பஸ் நிலையம் கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-04-22 19:00 GMT

குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் திருமருகலில் பஸ் நிலையம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருமருகல்

நாகை- நன்னிலம் மெயின் சாலையில் திருமருகல் உள்ளது. திருமருகலை சுற்றி 54 வருவாய் கிராமங்கள், 39 ஊராட்சிகள் உள்ளன. திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருமருகலில் பஸ் நிலையம் இல்லை. பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழலகம் அருகே கழிவறை வசதியும் முறையாக செய்து தரப்படவில்லை.

பஸ் நிலையம் கட்டப்படுமா?

நாகையில் இருந்து திருமருகல் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கும்பகோணம், வேலூர், சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் திருமருகலில் இருந்து பெருநகரங்களுக்கு நேரடியாக பஸ் போக்குவரத்து இல்லை.

இதனால் திருமருகல் பகுதி கிராம மக்கள் தங்களுக்கு பஸ்சில் இருக்கை கிடைக்குமா? என்ற குழப்பத்துடனேயே வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட ேவண்டி உள்ளது. திருமருகல் பகுதி மக்கள் இருக்கை வசதியுடன் பஸ்சில் பயணிக்க 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகைக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏற வேண்டி உள்ளது. பிற பகுதிகளை திருமருகலுடன் இணைக்கும் வகையில் ரெயில் வசதியும் இல்லை.

நேரடி பஸ் போக்குவரத்து

எனவே திருமருகல் பகுதியில் பஸ் நிலையம் கட்டி பெரு நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி பஸ் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கனவாகும்.

இது குறித்து திருமருகல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஜயராகவன் கூறியதாவது:-

திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில், திருச்செங்காட்டங்குடியில் உத்திராபதீஸ்வரர் கோவில், திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில், திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில், சீயாத்தமங்கையில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் என பிரசித்திப்பெற்ற சிவாலயங்கள் இந்த பகுதியில் உள்ளன.

இந்த கோவில்களுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருமருகல் ஒன்றிய அலுவலகத்திற்கு அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கிராம பகுதியில் இருந்து நாகை, காரைக்கால், திருவாரூர், நன்னிலம், மயிலாடுதுறை, கும்பகோணம் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் திருமருகல் மைய பகுதியாக உள்ளது. இந்த நிலையில் திருமருகல் பஸ் நிறுத்தம் அமைந்துள்ள பகுதியில் கழிவறை வசதி கூட முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் பயணிகள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே திருமருகலில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டித்தர வேண்டும்.

கழிவறை வசதி இல்லை

திருமருகல் பகுதியை சேர்ந்த ரமேஷ்:-

திருமருகல் பஸ் நிறுத்தத்துக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். ஆனால் கழிவறை வசதி கூட முறையாக செய்து தரப்படவில்லை. எனவே பஸ் நிலையம் கட்டினால் கிராம மக்கள் சிரமமின்றி வெளியூர்களுக்கு பஸ்சில் பயணம் செய்ய வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்