சாலைகளை சீரமைக்க வேண்டும்
கீழையூர் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கீழையூர் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்திஆரோக்கியமேரி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஏழிசை வல்லபி (அ.தி.மு.க.):- விழுந்தமாவடி ஊராட்சியில் மாரியம்மன் கோவிலில் இருந்து கடற்கரை வரை செல்லக்கூடிய சாலையை நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்க வேண்டும். விழுந்தமாவடி மணல்மேடு நடுநிலைப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தை சீரமைக்க வேண்டும்.
சாலையை சீரமைக்க வேண்டும்
ஆறுமுகம் (பா.ஜனதா):- ஒன்றிய பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களின் கரையில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பிரதாபராமபுரம் ஊராட்சியில் கடற்கரையில் செல்லக்கூடிய வாய்க்காலில் தற்போது தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்பணைக்கு இடைப்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்டம் மூலம் மண் நிரப்பி சமப்படுத்த வேண்டும்.
நாகரெத்தினம் (தி.மு.க):- வேட்டைக்காரனிருப்பு முதல் புதுப்பள்ளி வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
சுதா (தி.மு.க.):- திருக்குவளை பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை வேண்டும்.
விரைவில்...
ஒன்றியக்குழு தலைவர்:- உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் நிதிநிலைக்கு தகுந்தபடி விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, துணைத்தலைவர் சவுரிராஜ், மேலாளர் பிச்சுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.