அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்
அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குழந்தை பிறந்தது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் கிராமத்தில் பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாரிமுத்து- அஞ்சம்மாள் தம்பதியினரின் மகள் முத்துலட்சுமி (வயது20). இவர் தனது முதல் பிரசவத்திற்காக தாய் வீடு உள்ள திருவாஞ்சியத்துக்கு வந்தார்.
கடந்த மாதம் முத்துலட்சுமிக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதனையடுத்து முத்துலட்சுமி சுயநினைவின்றி இருந்ததாகவும், இதுகுறித்து டாக்டர்களிடம் பெற்றோர் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.
தவறான சிகிச்சை
20 நாட்கள் கழித்து முத்துலட்சுமிக்கு சுயநினைவு வந்தது. ஆனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், எங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோ அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறியும், தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் திருவாஞ்சியம் கடைத்தெருவில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரண்யா அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.