குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேச்சேரி:
சாலை மறியல்
நங்கவள்ளி அருகே பெரியசோரகை ஊராட்சி திம்மாசிவளவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
எனவே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் அதே பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் நங்கவள்ளி-தாரமங்கலம் ரோட்டில் பெரியசோரகை ஆலமர பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பங்களிப்பு தொகை
இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும் போது, மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சமூக பங்களிப்பு தொகையாக ஒவ்வொரு இணைப்புக்கு ரூ.1,200 கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.
ஆனால் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் நாங்கள் எப்படி? பணத்தை செலுத்த முடியும். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவ பிரபு மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.