2 மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியல்

வாணியம்பாடியில் பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து பலியான பள்ளி மாணவிகள் 2 பேர் உடல்களை வாங்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-27 19:00 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடியில் பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து பலியான பள்ளி மாணவிகள் 2 பேர் உடல்களை வாங்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை அமைக்கும் பணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் இருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதைக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிக்கனாங்குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி அங்கிருந்த முரம்பு மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தி உள்ளனர்.

கடந்த 4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.

2 மாணவிகள் பலி

அதே பள்ளியில் சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் மோனிகா (வயது 10), 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அதுபோல் அதே பகுதியை சேர்ந்த வேலுவின் மகள் ராஜலட்சுமி (வயது 13), 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற மோனிகா, ராஜலட்சுமி மற்றும் மணிவேல் என்ற 7 வயது சிறுவனும் பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென நீரில் மூழ்கிய 2 மாணவிகளும் மேலே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் ஓடிப்போய் அப்பகுதியில் இருப்பவர்களிடம் கூறினான்.

உடனடியாக அவர்கள் வந்து 2 மாணவிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அம்பலூர் போலீசார் 2 மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் சிக்கனாங்குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்களும், இறந்து போன பள்ளி மாணவிகளின் உறவினர்களும் ஒன்று சேர்ந்து அம்பலூர் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

மேலும் மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து திடீரென அம்பலூர் - புத்துக்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குழந்தைகள் இறப்பிற்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீதும், பள்ளி வளாகத்திற்குள் முரம்பு மண் எடுக்க அனுமதி அளித்த கல்வித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எழுத்து மூலமாக புகார் அளிக்கும்படியும் அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதன்பேரில் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

உதவி கலெக்டர் வருகை

இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போலீஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சம்பந்தப்பட்ட பள்ளியில் தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டு பின்னர் மாலை 4 மணி அளவில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு மாணவிகளின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ. சென்று மாணவிகளின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும் இறந்து போன மாணவிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்