குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2023-03-14 18:45 GMT

உக்கடம்

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் பகுதியில் சிறுவாணி, பில்லூர்-1 மற்றும் 2 கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழியாறு, கவுண்டம்பாளையம்-பவானி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 62 -வது வார்டு உக்கடம் ஆத்துப்பாலம் அருகே உள்ள ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆவதாக தெரிகிறது.

இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் காலிக்குடங்களுடன் ஆத்துப்பாலம் கரும்புக்கடை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து பல நாட்கள் ஆவதால், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே நாங்கள் மறியலை கைவிட்டு கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, உங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து போராட்டம்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளை பலமுறை சந்தித்து குடிநீர் தொடர்பாக தெரிவித்தோம். ஆனால் அவர்கள் குடிநீர் வினியோகம் செய்து 10 நாட்கள்தானே ஆகிறது என்று கூறுகிறார்கள். எங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து ஒரு மாத்துக்கும் மேல் ஆகிவிட்டது. எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்