மணல் லாரிகள் இயக்குவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சுவாமிமலை அருகே பள்ளி, கல்லூரி நேரத்தில் மணல் லாரிகள் இயக்குவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-26 18:40 GMT

சுவாமிமலை அருகே பள்ளி, கல்லூரி நேரத்தில் மணல் லாரிகள் இயக்குவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணல் லாரிகள்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே மதனத்தூரில் அரசு மணல் குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. இங்கிருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகள் முறைப்படி தார்ப்பாயால் மூடப்படுவதில்லை என பரவலாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். காலை, மாலை என பள்ளி, கல்லூரி நேரத்தில் மாணவர்கள் கூட்டம், கூட்டமாக செல்லும் நேரத்தில் மணல் லாரிகள் இயக்கப்படுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

கலெக்டரிடம் புகார்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி நேரங்களில் மணல் லாரிகளை தேவனாஞ்சேரி பகுதியில் அனுமதிக்க கூடாது என கலெக்டர் வாய்மொழி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மீறி மணல் லாரிகள் எந்நேரமும் போக்குவரத்துக்கு இடையூறாக சென்று வந்தன. இதுகுறித்து கும்பகோணம் தாசில்தாரிடம் பொதுமக்கள் முறையிட்ட போது அவர் கனிமவளத் துறையிடம் புகார் தெரிவியுங்கள் என கூறி உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.

சாலை மறியல்

பலமுறை முறையிட்டும் லாரிகளை கட்டுப்படுத்தாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாகமுத்து, கிளை செயலாளர் ராஜா பன்னீர்செல்வம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தேவனாஞ்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் லாரிகளை கட்டுப்படுத்த போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுப்பதாகவும், நாளை (புதன்கிழமை) தாசில்தார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்