குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2023-02-21 18:45 GMT

கோவை

குனியமுத்தூர் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

குடிநீர் பிரச்சினை

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் கோவையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. மேலும் மழை இல்லாததால் சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைந்தது. இதன் காரணமாக 20 வார்டு களில் குடிநீர் வினியோகம் செய்ய 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது.

இந்த நிலையில் 87-வது வார்டு குனியமுத்தூர் பகுதியில் 20 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டனர். மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் மண்டபம் அருகே திரண்டனர்.

மறியல் போராட்டம்

பின்னர் அவர்கள், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினர். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூறும்போது, குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்