நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க ேவண்டும்
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.;
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 47 கிராம ஊராட்சிகள் உள்ளது. பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2016-17-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை 2,666 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுவரை 1,353 வீடுகள் பயனாளிகளால் முடிக்கப்பட்டு உள்ளது. 1,313 வீடுகள் தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் 2020-21-ம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ் 118 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விரைந்து கட்டி முடிக்க வேண்டும்
இதில் பயனாளிகளால் 74 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 44 வீடுகள் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் கட்டி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிசை வீடு கணக்கெடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறைகள், பொது சுகாதார வளாகம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்து அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராமகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்கள் அருண், இமயவரம்பன், மகாலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.