மறைமலைநகர் நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-09-25 11:40 GMT

பருவ மழை விட்டு விட்டு பெய்து வரும் காரணத்தால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. இதையடுத்து மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி நேற்று மறைமலைநகர் சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் தலைமையில் டெங்கு புழுக்கள் ஒழிப்பு பணியாளர்கள் 95 பேர் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று மழை நீர் தேங்குகிற வகையில் வீட்டுக்கு வெளியே தேங்காய் ஓடுகள், மாடிகளில் தேவையற்ற பொருட்கள் மூலம் தண்ணீர் தேங்கி டெங்கு புழுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒரு சில வீடுகளில் மழை நீரில் உருவாகி இருந்த டெங்கு புழுக்களை அழித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் போன்றவை வழங்கப்பட்டது. டெங்கு புழு ஆய்வின் போது பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் சவுந்தர்ராஜன் கூறியதாவது:-

பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது வீடு, தொழிற்சாலை வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் மூலம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்