சாலை விதிமீறல்களுக்கு அபராதம், கெடுபிடி வசூல்

சாலை விதிமீறல்களுக்கு அபராதம், கெடுபிடி வசூல் ஏற்புடையதா என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-28 18:19 GMT

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

அபராதம் உயர்வு

அந்தப் புதிய வாகனச் சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது.

எட்டாக்கனி

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ப.ஜாகீர் உசேன் கூறியதாவது:-

பொதுவாக தண்டனைகள் கடுமையாக்கப்படும் பொழுதுதான் குற்றங்கள் முற்றிலும் நடைபெறாமல் தடுக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால் அது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பொருந்தும். நம் நாட்டுக்கு அல்ல. இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு முன்பாக மாநில அரசுகளும் மத்திய அரசும் சாலைகளை 100 சதவீதம் தரம் வாய்ந்தவைகளாக மாற்ற வேண்டும்.

தூசி இல்லாத சாலைகள் வேண்டும். மழைக்காலங்களில் பள்ளங்களில் விழுந்து அடிபட்டு இறப்பவர்கள் ஏராளம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பது சாமானியருக்கு எட்டாக்கனி. இதில் காவல்துறையினர் பலரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்வது இல்லை. ஒருவேளை வழக்கு பதிந்தாலும் அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்திற்கு சென்று தண்டனைத் தொகையை செலுத்துவதற்கு முடியவில்லை. ஒரு மாதம் 2 மாதங்கள் காலதாமதம் ஆகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் ஒரு தண்டனையாக பார்க்கப்படுகிறது. எனவே, சாலை விதி மீறல்களுக்கு அதிகப்படியான கட்டண கெடுபிடி வசூல் ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

குறைக்க வேண்டும்

வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அமீனுத்தீன்:- தமிழ்நாடு அரசு தற்போது சாலை விதிமுறை மீறலுக்கு வசூலிக்கும் தொகைகள் மிகவும் அதிகமாக உள்ளது. சாதாரண நடுத்தர மக்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றால் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். இதனால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு சென்று மருந்துகள் வாங்கவோ, குடும்பத்துடன் வெளியில் செல்லவோ முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனங்களை விட்டு விட்டு போங்கள் என போலீசார் கூறுவதால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் பாதிப்பின்றி வெளியில் செல்ல முடியும். விவசாயிகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உழவர் சந்தை மற்றும் வியாபாரத்துக்கு எடுத்துச் செல்லும்போது கட்டாயப்படுத்தி அவரது வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதனை தடுக்க அரசு முன்வர வேண்டும்.

ஆரணியை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.நீலமுருகன்:- போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை தற்போது அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. வாகனத் தணிக்கை செய்தாலும் அதில் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய சூழ்நிலையில் 3 ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பில் இருந்து தற்போதுதான் கூலி தொழிலாளர்கள் மெல்ல மெல்ல மீண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு வரக்கூடிய சொற்ப பணத்தையும் காவல்துறையினர் அபராதம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை அதிகமாக இருப்பதால் வேதனைக்கு உள்ளாகின்றனர். காவல்துறை எச்சரிக்கை விடுத்து, குறைந்த அளவில் அபராதம் வசூலிக்க வேண்டும்.

படிப்படியாக...

திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.கே.அய்யப்பன்:-்

தற்போது போக்குவரத்து விதி மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதால் நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக பெருமளவில் சிறு குறு தொழில் பாதிக்கப்பட்டு, பொது மக்களிடம் பண நடமாட்டம் இன்றி அவதிப்பட்டு தற்போதுதான் அதில் இருந்து மீண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிமுறை மீறல்களை தடுக்க கடுமையான சட்டம் தேவைதான். அதை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். ஒரேயடியாக ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என அபராதம் விதிக்கக் கூடாது. ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி வழியாக சென்றால் பல மடங்கு ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. எனவே அனைத்தையும் எளிமைப்படுத்தி, அதன் பிறகு அபராதம் விதிக்கலாம்.

திருவண்ணாமலையை சேர்ந்த பாக்கியராஜ்:- திருவண்ணாமலை நகரை பொறுத்தவரையில் இதுவரை போலீசாரின் வாகனத் தணிக்கை என்ற கெடுபிடிகள் அதிக அளவில் இல்லை. சமீப நாட்களாக இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் பலர் மின்னல் வேகத்திலும், செல்போன் பேசிய படியும் செல்கின்றனர். இவர்களால் சில சமயங்களில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பண்டிகை காலங்கள் வருவதாலும், அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். விபத்துக்கள் ஏற்படக்கூடிய வகையில் வாகனங்கள் இயக்குபவர்கள் மீதும், வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய போலீசார் திருவண்ணாமலை நகரில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். தற்சமயம் அபராத தொகை அதிகரித்துள்ளது. மக்களின் நலனை கருதி விதிமீறல்களில் ஈடுபடுவர்களுக்கு மட்டும் போலீசார் அபராதத்தொகை விதிக்க வேண்டும்.

மதித்து நடந்தால் நல்லது

அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர்:- அரக்கோணம் மட்டுமின்றி சென்னை உள்பட பல ஊர்களுக்கு வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி, வாகன சோதனையின் போது போலீசார் கேட்கும் உரிய ஆவணங்களை காண்பித்தால் சரி பார்த்து அனுப்பி விடுகின்றனர். பணம் ஏதும் கேட்பதில்லை. காரணமின்றி அபராதங்களும் விதிப்பதில்லை. முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓட்டுபவர்கள்தான் அபராதங்களுக்கு ஆளாகின்றனர். மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை மருத்துவமனை, பள்ளிகளுக்கு அழைத்து செல்பவர்களை போலீசார் சோதனையின் போது சில நேரங்களில் நிறுத்தி கேட்டால் அப்போது செல்லக் கூடிய காரணத்தை தெரிவித்தால் அனுப்பி விடுகின்றனர்.

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த பொன்னரசு:- போக்குவரத்து விதிகளை மீறுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகை முன்பைவிட தற்போது அதிகமாக உள்ளது. போக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரை சாலைகளில் நின்று போக்குவரத்தை சீர் செய்கின்றனர். அப்போது போக்குவரத்து விதியை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கின்றனர். அடிக்கடி வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் வசூலிப்பதில்லை. போக்குவரத்து விதிகளை மதித்து நடந்தால் அனைவருக்கும் நல்லது. விபத்துகளும் ஏற்படாது. போலீசாரும் அபராதம் விதிக்க மாட்டார்கள்.

உயிர்களை காக்கத்தான்

ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த குலசேகரன்:- மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தினால் ஏற்படும் உயிர் சேதத்தை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்துகின்றனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். அதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஆங்காங்கே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவது எரிச்சலாக காணப்படும். ஆனால் மோட்டார் சைக்கிளில் நமது இரண்டு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது மூன்று உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரு சில இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபடுகின்றனர் என நினைத்து அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

உயிர்காக்கும் மருந்து

வேலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்:-

ஹெல்மெட் அணிவதால் விபத்துகளில் இருந்து உயிர் பிழைக்கலாம். ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்குகிறோம். எனினும் மீண்டும் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் தான் வருகிறார்கள். அவர்களுக்கு எத்தனை முறை அறிவுரை வழங்கினாலும் அதை கண்டுகொள்வதில்லை. எனவே நாங்கள் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டி உள்ளது. அவ்வாறு விதிப்பதால் தான் அவர்கள் திருந்தி, அடுத்த முறை ஹெல்மெட்டுடன் பயணிக்கிறார்கள். அரசின் அபராதத்தொகை உயர்வு கசப்பானது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அது அவர்களின் உயிர் காக்க அளிக்கப்படும் கசப்பான மருந்து தான் என்பதை அவர்கள் உணர்வதில்லை. காப்பீடு இல்லாமல் பயணித்து பலர் விபத்துகளில் சிக்கி பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். பெரும்பாலும் தாறுமாறாக சாலையில் செல்பவர்களுக்கும், செல்போன் பேசியபடி செல்பவர்களுக்கும்தான் அபராதம் விதித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்