பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்ட விவகாரம்:லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல்- ஐகோர்ட்டு உத்தரவு
பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
சாலை பணி
மதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மாநகராட்சி ஒப்பந்தகாரராக உள்ளேன். இதற்கிடையே, கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பொன்நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. இந்த பணியை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டேன். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் வழங்குவதற்கு முன்னரே சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், துணை மேயர் திரவியமும், உதவி என்ஜினீயரும் அந்த பணியை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பேவர் பிளாக் சாலை பணிகளை முடித்து பல வருடங்கள் ஆன பிறகும் செலவினத்தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே, அந்த தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
எது உண்மை?
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் இதற்கு முன்னர் மேற்கொண்ட பல்வேறு பணிகளில் குறைபாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்றாததால் இந்த பணிக்கான தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வக்கீல் தெரிவித்தார்.
ஆனால், பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை மனுதாரர் முடித்து விட்டதாக துணை மேயரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பணியை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் உத்தரவு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. பேவர் பிளாக் சாலை அமைக்கப்படவில்லை என்று மாநகராட்சி சமர்ப்பித்துள்ள புகைப்படங்கள் உள்ளன.
இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.
அறிக்கை தாக்கல்
அதே சமயத்தில் 2012-ம் ஆண்டு மனுதாரர் மேற்கொண்ட பணியில் குறைபாடுகள் சரி செய்யப்படாததால் இந்த தொகை வழங்கப்படவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இவையனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. இந்த பணிக்கான டெண்டர் எப்போது வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிப்பது தான் சரியானது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. அதன்படி, இந்த விவகாரம் குறித்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.