பட்டினச்சேரி மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

நாகை, பட்டினச்சேரி கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கடல் நீருடன் கலந்துள்ளது என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

Update: 2023-03-08 12:05 GMT

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உயிர்கள் வாழ இன்றியமையாததாக விளங்கும் காற்றையும், நீரையும் மாசுகள் கலக்காதவாறு காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

இருப்பினும், அறிவியல் முன்னேற்றம் காரணமாக, மாசுக்களின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக, மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டம், பட்டினச்சேரி கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கடல் நீருடன் கலந்துள்ளது என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் கச்சா எண்ணெயை கடல் பகுதி வழியாக கொண்டு செல்லும் வகையில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக கடல் நீர் கருப்பு நிறமாக மாறியதுடன் இதன் துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் பரவி, அப்பகுதி மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டதாக செய்திகள் வந்தன.

மேற்படி உடைப்பு சரிசெய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடல்நீர் மாசடைந்து அதன் தாக்கம் விரிவடைந்து கொண்டே செல்வதாகவும், கடந்த 02-03-2023 அன்று ஏற்பட்ட இந்த உடைப்பு காரணமாக, அன்றே இதனுடைய தாக்கம் கடலில் கண்டறியப்பட்டதாகவும், இரண்டே நாட்களில் இது மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு பரவியதாகவும், 05-03-2023 அன்று 10.33 கிலோ மீட்டர் தூரம் பரவி இருந்ததாகவும், இன்றைய நிலவரப்படி 12 கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

கச்சா எண்ணெய் கசிவு காரணமாக ஏற்பட்ட மாசு அப்பகுதியில் சேரும் பட்சத்தில், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், எண்ணெய் துகள்கள் கடற்கரையில் தேங்குவதன் காரணமாக சுற்றுலாவும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இந்த மாசு காரணமாக மீன் இனங்களின் சுவாச உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மீன்கள் அழியக்கூடும் என்றும், இந்தப் பிரச்சனை தீர்வதற்கு இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கடல் மாசு காரணமாக, மேற்படி பகுதியில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் பிடிக்கும் மீன்கள் விற்பனையாகாது என்றும், தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் குழாய்களை முற்றிலுமாக அகற்றக் கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கான இழப்பீட்டை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய் வாயிலாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வது உள்ளிட்ட எந்த பணியையும் தற்காலிகமாக மேற்கொள்ளக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டு இருந்தாலும், இதற்கான கால அளவை குறிப்பிடாததால் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நிலவுகிறது.

மீனவர்களுக்கான இழப்பீடு குறித்து மாநில அரசோ அல்லது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமோ வாய் திறக்காதது மீனவர்கள் மத்தியில் ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தால் புதைக்கப்பட்ட குழாயில் ஏற்பட்ட கசிவுதான் என்பதால் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டிய கடமையும், இழப்பீட்டினை வழங்க வேண்டிய பொறுப்பும் அந்த நிறுவனத்திற்கு உள்ளது. இதனைப் பெற்றுத் தரவேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது.

மேற்படி பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதையும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு, மீனவர்களுக்கான இழப்பீட்டினை வழங்குவதையும், முற்றிலுமாக குழாயினை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்