பட்டா பெயர் மாற்றம் செய்து தரக்கோரி: மூதாட்டி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி

பட்டா பெயர் மாற்றம் செய்து தரக்கோரி விவசாயி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2023-05-22 18:44 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 361 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 63 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 32 பேருக்கு ரூ.3,26,417 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம், கே.எம்.சி. காலனி, ரத்தினசாலை, ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

இப்பகுதியில் நாங்கள் சுமார் 5 தலைமுறையாக 130 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா இல்லாமல், கரூர் மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்து வருகிறோம். எங்களுக்கு இந்நாள் வரையிலும் பட்டாக்கள் கிடையாது. ஆகவே எங்களுக்கு குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். 15 தினங்களுக்கு முன்பு திடீரென அரசு அதிகாரிகள் வந்து இங்கு வசித்து வரும் மக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும்.

அடுக்குமாடி கட்டிடம்

இந்த இடத்தில் வீடுகளை இடித்துவிட்டு அடுக்குமாடி கட்டிடம் கட்டி அனைவருக்கும் கொடுப்பதாக வாய் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால் இங்கு நாங்கள் வீடுகளை காலி செய்து விட்டு எங்கு செல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு நிரந்தரமாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டாவும், வீடும் எங்களுக்கு வேண்டும்.

அடுக்குமாடி கட்டிடம் கட்டினால் எங்களுக்கு மாற்று இடத்தில் தற்காலிகமாக குடியிருக்கும் வீடு மற்றும் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடையில்லாமல் வழிவகை செய்து தர வேண்டும். அடுக்குமாடி கட்டிட பணிகள் முடிந்தபிறகு இங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அவர்களுக்கு சொந்தமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயற்சி

திருக்காம்புலியூர் கிராமம், எழுதியாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி கருப்பாயி தனது குடும்பத்தினருடன் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, அவர்களது குடும்பத்தினர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர்.

அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் இந்த முகவரியில் 60 ஆண்டுகாலமாக வசித்து வருகிறோம். குடியிருக்கும் வீட்டிற்கு 1993- ஆண்டு குளித்தலை வட்டாட்சியர் எனக்கு வீட்டுமனை ஒப்படைப்பு நமூனா பட்டாவை வழங்கினார். அந்த அசல் பட்டா எங்கள் கைவசம் உள்ளது. அதன்பின்னர் நானும் எனது கணவரும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம்.

பட்டா பெயர் மாற்றி தர வேண்டும்

அப்போது புதிதாக நத்தம் பட்டா வழங்குவதற்காக அரசு அதிகாரிகள் வந்தபோது எனது வீட்டில் அருகில் வசித்து வந்தவர் எங்களது நிலத்திற்கு அவரது பெயரை கொடுத்துவிட்டார். அதனை பற்றி விவரம் தெரியாமல் இந்த இடத்தில் எனது குடும்பத்தினர் வாழ்ந்து வந்தோம்.

தற்போது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றபோது நாங்கள் வாழ்ந்து வந்த வீட்டினுடைய பட்டா வேறொருவர் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். அவருடைய வாரிசுகள் இந்த நிலம் எங்களது அப்பா பெயரில் உள்ளது என கூறுகிறார்கள். எனவே இதனை தீவிர விசாரணை செய்து பட்டாவினை எனது பெயருக்கு மாற்றி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்