மருந்து வாங்கும் இடத்தில் மேற்கூரை இல்லாததால் நோயாளிகள் அவதி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கும் இடத்தில் மேற்கூரை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கும் இடத்தில் மேற்கூரை இல்லாததால் நோயாளிகள் அவதிய டைந்து வருகின்றனர்.
அத்தியாவசிய பணிகள்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி கடந்த 2010-ம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் ஆஸ்பத்திரிக்கு புதிதாக ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் போதுமான நிதி இருந்தும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். மருந்து, மாத்திரைகள் வாங்கும் இடத்தில் மேற்கூரை இல்லாததால் நோயாளிகள் மழையில் நனைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமராக்கள்
ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்கள் ஏன் பொருத்தவில்லை என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஆஸ்பத்திரி நிர்வாகம் போதுமான நிதி இல்லை என்று கூறியதாக தெரிகிறது. ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி வருகிறது.
இதை தவிர தேசிய தரச்சான்று பெற்றதற்கு நிதி பெறப்பட்டு உள்ளது. இந்த நிதிகளை கொண்டு புதிதாக கட்டிட வசதிகள் ஏற்படுத்த முடியாது. ஆனால் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளலாம். அதாவது கண்காணிப்பு கேமராக்கள், பராமரிப்பு பணிகள், மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கு ஆஸ்பத்திரி கமிட்டியில் அனுமதி பெற்று பணிகளை செய்யலாம். பின்னர் வரவு-செலவு கணக்குகளை சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறும் நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
மேற்கூரை வசதி இல்லை
ஆனால் நிதி இல்லை அத்தியாவசிய பணிகள் செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் மருந்து, மாத்திரைகள் வாங்கும் இடத்தில் மேற்கூரை இல்லை. இதனால் நோயாளிகள் மழையில் நனைந்து கொண்டு மருந்து, மாத்திரைகளை வாங்கி செல்ல வேண்டிய உள்ளது. மேலும் புதிதாக கட்டிடம் கட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்படைக்கும் போது, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அப்போது தான் விடுப்பட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த முடியும். நோயாளிகளின் உறவினர்கள் கூட்டம், கூட்டமாக வளாகத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு கட்டிடத்தின் பின்புறம் தனியாக மேற்கூரை, இருக்கைகள் அமைத்து கொடுக்கலாம். மேலும் நோயாளிகள் மழையில் நனைவதை தடுக்க மருந்து வாங்கும் இடத்தின் தளத்தை உயர்த்தி, அங்கு மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
போதுமான நிதி
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சந்திரா கூறியதாவது:-
ஆஸ்பத்திரியில் போதுமான நிதி உள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்படியாக மேற்கொள்ளப்படும். ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தாமல் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.