ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு பாஸ்போர்ட் - ஐகோர்ட்டில் பதிவுத்துறை தகவல்
பாஸ்போர்ட் குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில், வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முருகன், சாந்தன் உள்ளிட்டோரை இலங்கைக்கு அனுப்ப அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு கடிதம் அனுப்பியதாகவும், மீண்டும் கடந்த நவம்பர் மாதம் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் பாஸ்போர்ட் கோரி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அணுகலாம் எனவும் கூறப்பட்டது. இதேபோல ஆதார் அட்டை வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அமைப்பை முருகன் அணுகலாம் எனவும் வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது.