"கட்சிதான் உங்கள் சாதி; தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம்" - புதிய நிர்வாகிகளுக்கு தி.மு.க. அறிவுரை
“கட்சிதான் உங்கள் சாதி; தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம்” என புதிய நிர்வாகிகளுக்கு தி.மு.க. அறிவுரை வழங்கி உள்ளது.;
சென்னை,
"இனி உங்களுக்கென எந்தச் சாதி அடையாளமும் இருக்கக் கூடாது; தி.மு.க.தான் உங்கள் சாதி; கட்சித் தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணி தொடர வேண்டும்" என்பதை புதிதாக பொறுப்பேற்கவுள்ள நிர்வாகிகள் தங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது .
தி.மு.க.வின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்புகள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
கட்சி நிர்வாகிகளுக்கு "கழகம்தான் உங்கள் சாதி; தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம்" என்ற தலைப்பில், அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "உங்களில் பலர், முன்பே பொறுப்பில் இருந்தவர்களாக இருக்கலாம். இன்னும் பலர் பொறுப்புக்கு புதியவர்களாக இருக்கலாம். இருந்தவர்களும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் எதிர்கொள்ள வேண்டிய காலம் சோதனைகள் நிறைந்தவை என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள். நம் இயக்கத்தைப் போன்று பெரும் வெற்றி பெற்ற இயக்கமும் இல்லை.அதல பாதாள தோல்வியைச் சந்தித்த இயக்கமும் இல்லை. ஆனால் நமது இயக்கம் இடுப்பொடித்த தோல்விகளையும் மிடுக்கோடு எதிர்கொண்டு எழுந்து நின்றுள்ளது. இது தனிமனிதச் செல்வாக்கின் துணை கொண்டு வளர்ந்த இயக்கமில்லை. தனித்துவமிக்க இதன் கொள்களே இதனது வலிவு.
இனி உங்களுக்கென எந்தச் சாதி அடையாளமும் இருக்கக் கூடாது; தி.மு.கழகம்தான் உங்கள் சாதி; கழகத் தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணி தொடர வேண்டும்.இதனை மனதில் நிறுத்துங்கள். பொறுப்பேற்க இருக்கும் ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது; எந்த தனிமனிதனின் செல்வாக்காலும் திமுக வளர்ந்த இயக்கமல்ல; இதனைத் துவக்கியவர்கள் மிகமிகச் சாமான்யர்கள்; அவர்களிடமிருந்த ஒரே பலம் லட்சிய பலம்தான். அதன் முன்னணித் தலைவர்கள் யாருக்கும் பின்னணியில் சாதிப்பலம் கிடையாது.
இயக்கத்தை வளர்த்து பதவி, பவுசுகளைப் பெறத் துவக்கப்பட்ட இயக்கமுமல்ல இது; இது துவங்கிய காலத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம்கூட இல்லை. இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இணைந்தவர்கள் அத்தனைபேரும் ஒரு பஞ்சாயத்து தலைவராகலாம் என்ற எண்ணம்கூட இல்லாது அர்ப்பணிப்பு உணர்வு ஒன்றோடுதான் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நமது இயக்க அரசியல் வளர்ச்சி சாதியையோ, மதத்தையோ சேர்ந்தது அல்ல; அதன் கொள்கை அடிப்படையில் அமைந்தது. சாதி, மத அரசியல் நடத்தி நம்மைப் பிரித்து குளிர்காயலாம் என்று கருதும் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருப்போம்" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.